எங்கள் சிறு பிராயத்தில் நாகர்கோவில் நகரில் மட்டுமே வீடுகளிலும் தெருக்களிலும் குழல் விளக்குகள் பயன் படுத்தப்பட்டு வந்தன. கிராமங்களில் நடுத்தர வர்க்க வீடுகள் மட்டுமன்றி தெருவிளக்குகள் கூட குண்டு பல்புகளின் மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் தான் இயங்கின !
மின் இணைப்பே கண்டிராத வீடுகள் ஏராளம். மாலையில்
விளையாடிக் களைத்த நாங்கள் புத்தகத்தைக் கையில் எடுத்தவுடனேயே தூக்க தேவதையால்
இதமாகத் தழுவிக் கொள்ளப் படுவோம் !
தம்பியும் நானும் ஒருவரையொருவர் தூக்கத்தைக்
கலைக்கும் பொருட்டு புத்தகத்தை ஓங்கி தரையில் அடித்து ஒலி எழுப்புவதுண்டு.
அம்மாவின் வற்புறுத்தலின் பேரில், நடந்த படியே உரக்க சப்தமிட்டபடி சிறிது நேரம்
படித்த பின்னர் தரையில் அமர்ந்து விட்ட இடத்திலிருந்து தூக்கத்தைத் தொடர்வோம் !
திடீர் மின்தடை ஏற்படும் தருணங்களில் மின்வெட்டு
நீங்கி விடக்கூடாதென்ற பிரார்த்தனையுடன், தூங்கி வழியும் எங்களைப் போன்ற சிறுவர்கள் மிகுந்த
உற்சாகத்துடன் தெருவிற்கு
வந்து விடுவார்கள் !
மின்வெட்டு நேரத்தை வீணாக்காமல் எங்களுக்கு
உணவளித்து மின்வெட்டு
நீங்கிய பின் படிக்க வைத்து விடலாமென்ற அம்மாவின் சதித்திட்டத்தை முறியடிக்கும்
விதமாக,
மின்சாரம் வந்த பிறகு சாப்பிட வருவதாகக் கூறி
விளையாட்டைத் தொடர்வோம் !
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மின்துறை எங்களைச்
சதிப்பதில்லை. இரவு எட்டரை மணிக்கு பின்னரும் மின்தடை நீடித்தால் குப்பி விளக்கின்
வெளிச்சத்தில் அம்மா சாப்பிட வைப்பார். சாப்பிட்ட பின் சீக்கிரமாகவே படுக்கச்
சென்று விடுவதற்கு, மின்தடை நீங்கிவிட்டால்
படிக்கச் சொல்லி எங்களை நிர்ப்பந்திக்கும்
அம்மாவின் கொடுமையே காரணம் !
பாயில் படுத்தபடியே நாங்கள் கலகலப்பாகப் பேசிக்
கொண்டிருக்கும் போதே மின்வெட்டு நீங்கி விடும் நேர்வுகளில் ,
அம்மா எங்களை எழுந்து படிக்கச் சொன்னாலும்,
ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போன்று நானும்
தம்பியும் நடிகர் திலகங்களாகித் தப்பித்துக் கொள்வோம் !
எங்கள் தெருவிலுள்ள முக்கண்ணன் போற்றி மகன் மணி
அண்ணன் மற்றும் ஒன் நாட் நயன் அண்ணாச்சி ஆகியோர் சிறுவர்களாகிய எங்களுக்கு மிகவும்
பிடித்தானவர்களாக மாறியதற்கு காரணம் - உற்சாக பானத்தின் உந்துதலில் அவர்கள்
அடிக்கடி தெருவில் நடத்துகின்ற மாலை நேர இலவச கேளிக்கைகளே !
அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய அப்பா,
காலை பத்து மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு
மறுநாள் பிற்பகல் இரண்டு மணியளவில் பணி முடித்து வருவதால்,
எங்கள் திருவிளையாடல்களனைத்தும்
அப்பா இல்லாத சமயங்களில் மட்டுமே !
நண்பர்கள் மத்தியில் கலகலப்பானவரான அப்பா,
எங்களைத் தேவையின்றி தண்டிக்கும் வழக்கமற்றவர்.
இருப்பினும் நாங்கள் செய்கின்ற சேட்டைகளை அம்மா தெரிவித்து விடுவாரோ என்ற அச்சம்
எங்களுக்கு எப்போதும் உண்டு !
அளவற்ற சேட்டைகளால் தங்கள் அப்பாவின் தொடர்
பிரம்படிகளுக்கு ஆளாகின்ற
கணேசன் ,சசி
மற்றும் குஞ்சான் முருகன் போன்ற 'அதிக
பாதிப்பின்றி தாக்குதலிருந்து தப்புவது எப்படி ?' என்பது குறித்து முனைவர் பட்டம் பெறத் தகுதி
வாய்ந்த நண்பர்கள் தங்கள் சக ஜீவிகளுக்கருளிய 'உதையோபதேசத்தின்'
சாரம் கீழ் வருமாறு.
பாடம்.1
தாக்குதல் துவங்குமுன் கட்டியான இரண்டு காக்கி
கால் சட்டைகளை அணிந்து கொள்தல் அவசியம்.பள்ளிச் சீருடைகளே இதற்கு போதுமானது
(சட்டையணிவதால் பிரம்படி உடம்பில் விழ வாய்ப்புள்ளதால் மேற்சட்டை தவிர்த்தல் நலம்) !
பாடம் 2
தாக்குதல் துவங்கு முன்னர் வீட்டுக் கதவுகள்
திறந்து வைத்திருத்தல் அவசியம். 'அய்யோ காப்பாத்துங்க'
என அலறி தாக்குதலின் துவக்கத்திலேயே எதிரியை நிலை
குலையச் செய்வது யுத்த தந்திரத்தின் ஆரம்ப பாடம்.
பாடம் 3
பிரம்படி ஸ்பரிசம் பின்பக்கத்தை அடையவில்லை என்ற
சந்தேகம் சிறிதளவும் அப்பாவுக்கு தோன்றாத விதத்தில் நம் நடிப்பு இயல்பாக அமைவது
அவசியம்.
பாடம் 4
தாக்குதலின் போது அப்பா குறிப்பிடுகின்ற
குற்றச்சாட்டை அப்படியே நிபந்தனைகளேதுமின்றி ஏற்றுக் கொள்வதுடன் "இனிய மேல்
அப்படி செய்ய மாட்டேன்" என்று கண்ணீருடன் கூறி பிறரது இரக்கத்திற்கு ஆளாக
வேண்டியதும் அவசியம்.
பாடம் 5
கூக்குரல் கேட்டு வாசலில் கூடும் கூட்டம் ,
அப்பாவின் தாக்குதல் வேகம் குறைய வழி வகுக்கும்.
எக்காரணத்தை முன்னிட்டும் தாக்குதலில் இருந்து தப்பிக்க புறமுதுகிட்டு ஓடி
அப்பாவின் கோபத்தை அதிகரிக்க முயற்சித்தல் கூடாது. மீண்டுமோர்
அதிரடித் தாக்குதலுக்கு ஆளாகும் வேளையில் இரு கால்
சட்டைகளணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான கால
அவகாசத்திற்கு உத்திரவாதம் இல்லை.
பாடம் 6
வெளியே கூடியிருக்கும் கூட்டத்திலிருந்து பக்கத்து
வீட்டு மாமாக்கள் எவராவது நமது
இரட்சகராகக் கூடும். தொடர் முயற்சிகளுக்குப்
பின்னரும் தாக்குதல் தொடரும் பட்சத்தில், கடைசி ஆயுதமாக 'காப்பாத்துங்க அம்மா'
என கருணையே வடிவான அம்மாவை துணைக்கு அழைக்கும்
போது சந்தேகத்திற்கிடமின்றி அம்மாவால் சேதமின்றி நாம் மீட்கப் பட்டிருப்போம் !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
தி.சேதுமாதவன்,
ஆட்சியர்,
“தமிழ்ப்புலம்”
வலைப்பூ,
{04-12-2021}
-----------------------------------------------------------------------------------------