தமிழ்ப் புலம்

மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

புதன், 2 மார்ச், 2022

அந்நாளை நினைக்கையிலே (48) வித்வான் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் !

 

1971 காலகட்டத்தில் பறக்கை கீழத் தெருவில் மேற்கு நோக்கியமைந்த திருவாவடுதுறை மடத்திற்கு புதிய சாமியார் வந்திருப்பதாக அறிந்ததும், மடத்தின் வாசலில் கூடிய கூட்டத்தில் ஆர்வத்துடன் நின்றிருந்த சிறுவர்களாகிய எங்களை ஆறடி உயரம்,காதில் தங்கக் குண்டலங்கள், தலையிலும் மார்பிலும் ருத்ராட்ச மாலையுடன் சிகப்பு நிறமும் வசீகரத் தோற்றமும் கொண்ட காவி உடை தரித்த வித்வான் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் கனிவுடன் வரவேற்றார் !

 

மணி அண்ணன் தனது குழுவினருடன் மாலைகட்ட உபயோகித்து வந்த காவி வண்ண கல்மண்டபமாக மட்டுமே காட்சியளித்த 'சாமியார் மடம் ' என்று அழைக்கப் படுகின்ற தலம்,  தம்பிரான் வருகையால் புதுப்பொலிவு பெற்றது !


சிறந்த கல்விமானும் புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் குறித்த அறிவும் தெளிவும் தமிழில் ஆளுமை வாய்ந்த கல்வியாளர்களுடனும் புலவர்களுடனும் விவாதிக்கும் திறனும் ஒருங்கே கொண்ட இலக்கிய வாதியான தம்பிரானைத் தேடி உள்ளூர் - வெளியூர் கல்வியாளர்களுடன் ஆன்மீக வாதிகளும் பறக்கைக்கு தினம் வந்த வண்ணமிருந்தனர் !

 

அதிகாலை துயிலெழுந்து குளித்து தியானம் செய்யும் தம்பிரான் ஒரு யோகிக்கான உடற்கட்டுடையவர். சனி, ஞாயிறு தினங்களிலும் இதர விடுமுறை நாட்களிலும் காலை பத்து முதல் பதினொன்றரை மணி வரை தேவாரம், திருவாசகப் பாடல்களை கம்பீரமான தனது குரலில் இசையுடன் பாடி எங்களையும் பாட வைத்ததோடு பொருள் கற்பித்து இரட்டை வரி புத்தகத்தில் பிழையின்றி தமிழை எழுதவும் வைத்தார் தம்பிரான் !

 

அளவான அர்த்தமுள்ள பேச்சு, ஒழுக்கத்துடன் நேரம் தவறாமையையும் போதித்த அவர் "தோடுடைய செவியன் விடையேறியோர் " என திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடலை பண்ணிசைத்துப் பாடுவதைக் கேட்பதற்காகவே இசை ஆர்வலர்களின் சங்கமொன்று மடத்தின் திண்ணையில் செவி சாய்த்திருக்கும் !

 

மடத்தின் உள்ளே தெற்கு நோக்கிய நடராஜப் பெருமானுக்கு மணி அண்ணன் அபிஷேகம் முடித்த பின் , கூப்பிய கைகளுடன் தேவாரம் பாடுவது தம்பிரானின் வழக்கம் !


தீபாராதனை முடிவுற்ற பின் வழங்கப்படும் நெய்யுடன் கதலிப்பழம் சீனி கலந்த திருமதுரத்தினை ருசித்த பின், மடத்திலுள்ள பாதாம் மரத்திலிருந்து விழுகின்ற பழுத்த பழங்களின் தசையுடன் கூடிய கனியைச் சுவைத்து கடினமான பகுதியைக் கல்லால் உடைத்து மண் புரண்ட பாதாம் பருப்பை ஊதித் தின்பது எங்கள் வழக்கம் !

 

குழந்தைகளுக்கு பூரண சுதந்திரம் வழங்கியதுடன், செய்யும் சேட்டைகளை ரசிக்கும் குழந்தை உள்ளம் கொண்டவர் தம்பிரான். மடத்தைச் சுற்றியுள்ள நிலத்தில் பாத்தி கட்டி வகை வகையான அழகிய பூச்செடிகளை நட்டு நீரூற்றி ஊழியர்களின் துணையோடு எழில் மிகு பூங்காவனமாகவே மாற்றி விட்டார் தம்பிரான் !

 

பூங்காவனப் பிரவேசனத்திற்காகவே ஆன்மீக வகுப்பில் இணைந்த நண்பர்களுண்டு. பிச்சிப்பூக்களுடன் வண்ண வண்ணமாகப் பூத்துக் குலுங்கும் அரளி, சாமந்தி, வாடாமல்லி, செத்தி, அந்தி மந்தாரையுடன் வாழைப் பூக்களிலுள்ள தேனையும் நுகர வரும் கண்கவர் வண்ணங்களிலான பட்டாம்பூச்சிகளும், ரீங்காரமிடும் வண்டுகளும், தேனீக்களும், குளவிகளும் கண்ணுக்கு விருந்தாயின. மடத்தின் வளர்ப்புத் தேனீக்களுக்கு மது நுகர மடத்தை விட்டகல வேண்டிய அவசியமில்லை !

 

ஓங்கி உயர்ந்த இலவ மரக்கிளைகளில் கொஞ்சிக் குலாவும் பச்சைக் கிளிகள், புறாக்கள், மைனாக்கள், சிட்டுக்குருவிகள், விருந்தினராக வந்து செல்லும் வாலாட்டிக் குருவிகள், தெப்பக் குளத்து மீன்களை மரக்கிளைகளிலமர்ந்து சாவதானமாகப் புசிக்கின்ற மீன் கொத்திப் பறவைகள், கானமிசைக்கும் குயில்கள், மரங்கொத்தி, செண்பகம், பாதாம் மரக் கிளைகளிலமர்ந்து, தரையில் மண் வீடுகட்டி பசி மறந்து விளையாடும் சிறுவர்கள் தலையில் எச்சமிட்டு மீண்டுமொரு முறை குளிக்கத் தூண்டும் பொறுப்பற்ற காகங்கள் என நீங்கா நினைவுகள் நெஞ்சிலுண்டு !

 

சுறுசுறுப்பாக எப்போதும் காணப்படும் தம்பிரான் மாலை நேரங்களில் ஊரிலுள்ள ஆன்மீகப் பிரியர்களுடன் அக்கரை பெருஞ்சடை மகாதேவரை தரிசிக்கச் செல்வார். செய்யும் பணியில் ஈடுபாடின்றிச் சோம்பிக் கிடந்த ஊழியர் சிலருக்கு தம்பிரானின் வருகை பணிச்சுமையை ஏற்படுத்தியது !

 

அதிகாலையில் எழுந்து மடத்தையும் சுற்றுப் புறத்தையும் சுத்தப்படுத்தி இலைச் சருகுகளை அனுதினம் எரிக்க வேண்டியிருந்ததுடன், காலையும் மாலையும் பூச்செடிகளை நீரூற்றி பராமரிக்கின்ற கூடுதல் பணியும் அழகுணர்ச்சி மிகுந்த (?) மடப்பணியாளர்களுக்கு அயர்ச்சியூட்டியது !

 

கோபத்தை வெளிக்காட்டவியலாது மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்த அவர்கள் தருணம் நோக்கி காத்திருந்தனர். 'கதை கட்ட ஒருவன் துணிந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு' என்ற கவியரசரின் வரிகளுக்கேற்ப "மடச்சாமியார் இருக்காரா?" எனத் தம்பிரானின் காதுபடக் கிண்டல் செய்கின்ற - மடத்திலுள்ள தென்னைகளிலிருந்து இளநீர் திருடும் 'குடிமகன்கள்' சிலர் மடத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரது இசைவோடு தங்கள் சுதந்திரத்திற்கு தடையாகவிருக்கும் தம்பிரானைக் குறித்து திருவாவடுதுறை மடத்தின் தலைமைக்கு உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் புனைந்து புகாராக அனுப்பினர் !

 

தம்பிரானுக்கு முன்பிருந்த கண்டிப்பான சாமியாரும் இதே முறையில் மாற்றப்பட்டவரே. தன்னைக் குறித்து புகார் அனுப்பப் பட்டதைக் கேள்வியுற்ற தம்பிரான் பறக்கை மடத்தில் தொடர விருப்பமின்றி சொந்த விருப்பத்தின் பேரில் மாறுதலில் சென்ற போது அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆன்மீக வாதிகள், பாசமிக்க குழந்தைகள் மட்டுமன்றி ஊர் மக்களும் மனம் கலங்கி நின்றனர் !

 

திருவாவடுதுறை ஆதீனமாக பிற்காலத்தில் தம்பிரான் தேர்ந்தெடுக்கப்பட்ட விழாவில் அவரது அழைப்பின் பேரில் சென்றவர்களில் எனது மாமாவும் ஒருவர். தம்பிரானது மாறுதலுக்குப் பிறகு சாமியார்கள் ஓரிருவர் பறக்கை மடத்திற்கு மாறுதலில் வந்து சென்றாலும், தம்பிரானைப் போன்று அறிவும் ஆற்றலும் இளந் தலைமுறையினருக்கு ஆன்மீகத்தோடு அறிவையும் போதிக்கும் உயர்ந்த எண்ணமும் ஒருங்கே கொண்ட சாமியார்கள் பறக்கைக்கு கிடைக்கவில்லை !

 

"மாதர் பிறைக் கண்ணி யானை " எனத் துவங்கி "கண்டேனவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்"என எங்கும் நிறைந்த எம்பெருமான் அய்யாறப்பரை நினைந்துருகும் மனதை உருக்குகின்ற அப்பர் பெருமானின் தேவாரம் எதிரொலித்து சைவ நெறி வளர்த்த புராதனமான திருவாவடுதுறை மடம், ஒரே ஒரு ஊழியருடன் வெறும் கல் மண்டபமாகக் களையிழந்து ஆண்டுகள் முப்பதுக்கும் மேலாகிறது ! 


அவ்வழியாக கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் மாயாத நினைவுகள் மனதில் தோன்றி மறைவதைத் தவிர்க்கவியலவில்லை !

  ------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

(sethumathavan2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்புலம்” வலைப்பூ,

{05-02-2022}

-------------------------------------------------------------------------------------------------------